காங்கிரஸ் கட்சி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்குவதற்காக தோளில் சுமந்தது. அதை மறந்துவிட்டு, அவர் நன்றி கெட்ட தனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “காங்கிரஸ் கட்சியை இனி எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது. பதவி ஆசைக்காக நம்மிடம் சொல்லாமல் சென்ற கட்சி அது. திமுக உழைப்பால்தான் காங்கிரஸ் வென்றது” என்று கடுமையாக விமரிசித்திருந்தார். இதற்கு சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது,
உதயநிதி அளந்து பேச வேண்டும். அவர் இன்று இந்த நிலைக்கு வர காங்கிரஸ் அவரைத் தோளில் சுமந்ததுதான் காரணம். நன்றி மறந்து பேசும் அவரது வன்மம் இதன் மூலம் வெளிப்பட்டுவிட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக வரக்கூடாது என்று தடுத்தவர் உதயநிதிதான். அதிமுக-வுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தவ்வி குதித்தவரும் அவர்தான். தமிழகத்தில் விஜய் நேர்மையான ஆட்சி கொடுப்பார்; தவெக ஆட்சி நிச்சயம் தொடரும்” என்று சாடினார். திமுக கூட்டத்தில் உதயநிதி பேசிய பேச்சுக்கு, காங்கிரஸ் எம்பி உடனடியாகத் தந்துள்ள இந்த அதிரடி பதிலடி, தமிழக அரசியல் கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
