தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த விவகாரத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிரடி கருத்து தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய வெடிகுண்டாக வெடித்துள்ளது.
உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்…— Dr.C.Vijayabaskar (@Vijayabaskarofl) June 15, 2026
இந்த விவகாரத்தில் மற்ற நிர்வாகிகள் இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்துப் பேசியபோதிலும், கட்சித் தலைமை மீதுள்ள கடுமையான அதிருப்தி காரணமாக சி.விஜயபாஸ்கர் இதுவரை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை என்று கூறப்படும் சூழலில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல; எத்தனை பேரை நீக்கினோம் என்பதையல்ல, எத்தனை பேரை ஒன்றிணைத்தோம் என்பதைத்தான் வரலாறு நினைவில் வைத்திருக்கும்” என எடப்பாடியைக் குறிவைத்து மிகக் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.
உழைக்கும் தொண்டர்களைத் தலைமையே எதிரியாகப் பார்ப்பதாகக் கட்சிக்குள்ளேயே விவாதத்தைக் கிளப்பியுள்ள விஜயபாஸ்கரின் இந்த மறைமுகப் பாய்ச்சல், இலை கட்சியின் உட்கட்சிப் பூசலை மீண்டும் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு, சோசியல் மீடியா ஏரியாக்களிலும் அடுத்த அதிரடி விக்கெட்டுக்கான மெகா ஸ்கெட்ச்சா என்ற பாணியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
