மத்தியப்பிரதேச மாநிலம் தப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஹினா கான் என்பவர், கடந்த 2023 ஆம் ஆண்டு மே 5-ம் தேதி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் 10 மாதங்களில் இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. நன்றாகவே சென்றுவந்த இளம் தம்பதிகளின் வாழ்க்கையில், கணவரின் உடல்நல குறைவு காரணமாக மாறுபாடுகள் ஏற்பட்டு, கடைசியில் ஒரு பரிதாப நிலையில் கதை முடிகிறது.
கணவர் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் தங்கியிருந்த நிலையில், உடல்நலம் குணமாகும் என்று கூறி, சிலர் அவரை ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஜாவ்ரா பகுதியில் உள்ள உசைன் தெக்ரி ஷெரீப்புக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த ஹினா கானை, அவரது கணவரின் இரு சகோதரர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இரவில் கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி, முதலில் இரண்டாவது அண்ணன் அறைக்குள் புகுந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் மூத்த அண்ணனும் அதே செயலில் ஈடுபட்டதாகவும் ஹினா கான் புகார் அளித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த போது, 10 மாத குழந்தையை கொலை செய்வதாக மிரட்டியதாகவும், கணவரின் உடல்நலம் சரியாக வேண்டுமென்றால் இதற்கெல்லாம் இடமளிக்க வேண்டும் என கூறி பயமுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்ந்து, பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும், பின்னர் கணவர் வீட்டிற்கு வந்த போது உண்மையை கூறியும், அவர் நம்ப மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஹினா கணவருடன் வேறு வீட்டிற்கு இடம் பெயர்ந்தாலும், அண்ணனின் கொடூரம் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில், மன உளைச்சலால் பெற்றோர் வீட்டிற்கு சென்ற ஹினா, நடந்தவற்றை உறவினர்களிடம் பகிர்ந்துள்ளார்.
பின்னர், குடும்ப பஞ்சாயத்து நடத்தப்பட்ட போதும், கணவரின் குடும்பத்தினர் யாரும் வராததால், ஹினா கான் தனது பெற்றோர்களுடன் குவாலியரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
