
உத்தரபிரதேச மாநிலம் முராபாத் மாவட்டத்தில் நடந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் மம்தா ராணி என்ற பெண், பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கணவர் விபத்தில் சிக்கியதாக பொய் கூறிய 3 மோசடிக்காரர்கள், அவரது நகைகளையும், மேலாடையையும் பறித்துச் சென்று ஆட்டோவில் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம், முராபாத் கல்ஷாஹீத் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மம்தா ராணி, சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பகுதிக்குள் வரும் நயா காவ்ன் கௌதம் நகரைச் சேர்ந்தவர். சம்பவ நாளன்று, தனது பணியை முடித்துவிட்டு, PAC சந்திப்பில் இருந்து ஆட்டோவில் இறங்கி நடந்து சென்றார்.
அப்போது மூன்று நபர்கள் அவரிடம் சென்று, “உங்கள் கணவர் தமேந்திரா விபத்தில் சிக்கியுள்ளார்” என கூறியதாக தெரிகிறது. இதனை கேட்டு பயந்துபோன மம்தா, கணவர் மற்றும் குடும்பத்தினரை செல்போன் மூலம் அழைக்க முயன்ற போது, அவர்கள் மம்தாவை தடுத்து , “விபத்து நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம்” என நம்ப வைத்துள்ளனர்.
மம்தாவை தங்களுடன் ஆட்டோவில் அழைத்துச் சென்ற அவர்கள், கல்ஷாஹீத் பகுதியிலுள்ள சனிப்பெயர்ச்சி கோவில் அருகே ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். பின்னர் மம்தாவிடம், “முன்னால் ஆபத்து உள்ளது, உங்கள் நகைகளை பையில் வைத்து வைத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறி, மம்தாவின் தாலி மற்றும் மேலாடையை கழற்றி பையில் வைக்குமாறு கூறியுள்ளனர்.
அவரும் பயத்தில் அதைச் செய்து விட்டார். பின்னர், அந்த மூவர் அந்த பெண்ணின் பையைக் பறித்து அவரை கீழே இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கல்ஷாஹீத் காவல் நிலையத்தில் மம்தா ராணி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.