நொய்டாவிலிருந்து டெல்லிக்கு உபர் டாக்ஸியில் சென்ற குடும்பம் ஒரு பயங்கர அனுபவத்தை சந்தித்தது. தம்பதியினர் தங்கள் சிறுமியுடன் பயணம் செய்துகொண்டிருந்தபோது, வழக்கமான சோதனைக்காக போலீசார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தனர்.

ஆனால், டிரைவரிடம் முழுமையான ஆவணங்கள் இல்லாததால், அவர் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க வாகனத்தை வேகமாக ஓட்டத் தொடங்கினார். பயந்துபோன குடும்பத்தினர், காருக்குள் இருந்தபடியே அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயந்து, “பையா, தயவுசெய்து காரை நிறுத்துங்கள்” என்று பலமுறை டிரைவரிடம் கெஞ்சுகிறார். அதேசமயம், சிறுமியும் அழுது அச்சத்தில் இருந்தது. குடும்பத்தினர் அபராதத்தை செலுத்த முன்வந்தும், ஓட்டுநர் மறுத்து “என் ஆவணங்கள் சரியில்லை, போலீசார் காரை பறிமுதல் செய்து விடுவார்கள்” என்று பதிலளித்தார். மேலும், வேகமாக சென்றதால், ஒரு காருடன் மோதுவதை தவறவிட்ட சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

“>

 

இறுதியில், குடும்பத்தினரின் பல வேண்டுகோளுக்குப் பிறகு, டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். குடும்பத்தினர் பாதுகாப்பாக காரிலிருந்து இறங்கிய உடனே, அவர் சம்பவ இடத்திலிருந்து வேகமாக ஓடிச்சென்றார். இந்த சம்பவத்தை சஞ்சய் மோகன் என்ற பயணி சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் பெரும் கவனம் பெற்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய கௌதம் நகர் போலீசார், அந்த உபர் டிரைவரை கைது செய்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.