இந்தியாவின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் ரூ.30,000 கோடி செலவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2026-27 முதல் 2035-36 வரையிலான 10 ஆண்டுகளுக்கு திருத்தப்பட்ட ‘உடான்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.28,840 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 100 புதிய விமான நிலையங்கள் மற்றும் 200 நவீன ஹெலிபேடுகளை உருவாக்கும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.
முக்கிய நகரங்களை மட்டுமின்றி, 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்கள், மலைப்பகுதிகள், தொலைதூர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, அந்தமான்-நிக்கோபார் போன்ற தீவுப் பகுதிகளுக்கும் விமான இணைப்பை விரிவுபடுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் பயணம், சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சி ஏற்படும் என அரசு எதிர்பார்க்கிறது.
2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் விமான நிலையங்களை உருவாக்குவது மட்டுமின்றி, அவற்றில் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் கிடைப்பதும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
