வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகப்படியான வேட்பாளர்கள் காரணமாக இந்த தேர்தலில் ஐந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தினமும் காலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் அரசியல் கட்சி தலைவர்கள் 10 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அதன் பின் ஒரு மணி வரை தேர்தல் பணிமனைகளில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனையடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் என்ற காரணத்தினால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் வருகிற 24, 25 -ஆம் தேதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோரும்  பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். அதேபோல் வருகிற 19-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

அதேபோல அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், விஜயபாஸ்கர், முனுசாமி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இரண்டு நாள் பிரச்சாரம் மேற்கொள்கின்றார். தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நாளை மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின் இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களைகட்டி உள்ளது.