ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகின்றது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக உள்ள ஆயத்த பணிகளை தேர்தல் துறை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு தொகுதியிலும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வரையறுக்கப்படுவது வழக்கம்தான். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. அது குறித்த விவரங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கான செலவினங்களுக்கு நிதி துறையின் ஒப்புதல் பெற வேண்டும்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது கொரோனா நோய் தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து இயல்பான நிலை உள்ளதால் இதனை கருதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கொரோனா காலத்தில் இருந்ததை விட வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.