அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமோ என்ற பீதி காட்டுத்தீயாய் பரவியது. இதற்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “யாரும் அச்சப்பட வேண்டாம், போதிய கையிருப்பு உள்ளது” என உறுதி அளித்துள்ளார். உண்மையில், சமையல் எரிவாயுவை (LPG) போல பெட்ரோலை சேமிப்பது கடினமல்ல; இந்தியாவிடம் தற்போது சுமார் 250 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் தயார் நிலையில் உள்ளது. இது அடுத்த 80 நாட்களுக்கு, அதாவது கிட்டத்தட்ட 2.5 மாதங்களுக்கு நாட்டின் தேவையை எந்தத் தடையும் இன்றிப் பூர்த்தி செய்யும் ‘மெகா’ பாதுகாப்பை வழங்குகிறது.

​இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவைத் தாங்கிப் பிடிப்பது 2004-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவாக்கிய ‘Indian Strategic Petroleum Reserves’ (ISPRL) என்ற மாஸ்டர் பிளான் தான். விசாகப்பட்டினம், மங்களூரு போன்ற இடங்களில் நிலத்தடிப் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கிடங்குகளில் போர் காலத்திற்காகவே எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறையும்போது வாங்கிச் சேமிக்கும் இந்த உத்தியால், வளைகுடா நாடுகளில் சிக்கல் ஏற்பட்டாலும், அடுத்த சில வாரங்களுக்குள் மாற்று நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து விநியோகத்தைச் சீராக்க அரசுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கிறது. எனவே, வதந்திகளை நம்பி பங்குகளில் கூட்டம் கூட்டி பதற்றமடையத் தேவையில்லை என்பதே நிதர்சனம்!