சவுதி அரேபியா மீது ஈரான் நடத்தி வரும் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தான் தனது ராணுவ உதவியை வழங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் ராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே ‘மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்’ கையெழுத்தானது. இதன்படி, சவுதி அரேபியா மீது நடத்தப்படும் தாக்குதல், பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டு, பாகிஸ்தான் ராணுவம் சவுதிக்கு உதவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது அக்காலகட்டத்தில் இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளப் போதிய ராணுவ பலம் இல்லை என்று கருதும் சவுதி, மேற்கூறிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் தனது ராணுவத்தையும், தளவாடங்களையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது.

இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் ஆகியோர் ரியாத் சென்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சவுதியின் இந்த நெருக்கடியால் பாகிஸ்தான் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. மறுபுறம், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்த மோதலில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளை ஈரான் எதிர்க்கும் வரை இந்த மோதல் நீடிக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளதால், பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கவே விரும்புகிறது. இருப்பினும், சவுதி அரேபியாவின் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் வல்லரசு நாடுகளின் மோதலில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் இந்த ராஜதந்திரப் பயணம், எந்த முடிவை எட்டும் என்பதே தற்போது சர்வதேச அரசியலில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.