இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வைரலாகி பரவி வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் ஏற்படும் பலவிதமான சம்பவங்கள் இணையத்தில் ட்ரெண்டாவது  வழக்கமாகியுள்ளது. அப்படித்தான் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு திருமணத்தின் அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குஜராத்தின் ராஜ் கோட்டில் உள்ள ஹதாலா என்னும் பகுதியைச் சேர்ந்த மன்சூக் சீதாபரா என்பவர் தனது  மகள் பிரியாவிற்கும் கல்பேஸ் என்ற நபருக்கும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பலர் குடித்துவிட்டு வந்ததில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு விழாவில் பிரச்சனையாகியுள்ளது. இதனை தொடர்ந்து தன்னுடைய மகளின் திருமணத்தில் இது போன்ற பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதற்காக இவர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது மன்சூத் தனது மகளின் திருமண அழைப்பிதழில் “மது குடித்தவர்கள் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம்” என தெளிவாக அச்சடித்துள்ளார். வித்தியாசமான செய்தியுடன் தரப்பட்ட இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த அழைப்பிதழ் யோசனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் ஒரு தரப்பினர் தங்கள் சமூகத்தை மோசமானவர்களாக சித்தரிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள மன்சூக்கின் சகோதரர் புபட் சீதாபரா  நாங்கள் எந்த சமூகத்தையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் இப்படி செய்யவில்லை. திருமணத்தில் எந்த சண்டையும் வராமல் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படி திருமண அழைப்பிதழ் குறிப்பிட்டோம். மகிழ்ச்சியான நினைவுகளை  கொண்டதாகவே திருமண நிகழ்வு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.