ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது, காசியாபாத்தின் இந்திராபுரம் காவல் நிலையத்தில் BNS சட்டத்தின் பிரிவு 69ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றப்பிரிவாகும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூன் 30ஆம் தேதி போலீசில் புகார் அளித்த நிலையில், அவரது வாக்குமூலமும் சாட்சிகளும் பெறப்பட்டுள்ளன. யாஷ்க்கு தனது தரப்பில் விளக்கம் அளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், யாஷ் தயாள் கடந்த 5 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்து திருமண வாக்குறுதி அளித்து அவருடன் உடல் உறவு கொண்டதாகவும், அவரது குடும்பத்தினரிடம் கூட அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பின் அதனை யாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவரை உணர்ச்சி, உடல் மற்றும் நிதி ரீதியாக சுரண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பலமுறை அந்தப் பெண்ணை உடல் ரீதியாக தாக்கியதாகவும், பிறகு மன்னிப்புக் கேட்டுப் போதுமான நம்பிக்கையை தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர் என்னை முழுமையாக சிதைத்துவிட்டார். மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவரை சார்ந்திருப்பதற்காக என்னை பயன்படுத்தினார். பலமுறை தற்கொலைக்கு முயற்சித்தேன். அவரது உண்மை முகம் தெரிந்ததும், நீதிக்காகவும், என் சுயமரியாதைக்காகவும் போராட வேண்டிய சூழ்நிலை உருவானது. எனது குரலைக் கேட்கவும், உண்மையை வெளிப்படுத்தவும் நான் தயாராக இருக்கிறேன்” என அந்தப் பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் – வீடியோ, மெசேஜ்கள், அழைப்பு பதிவுகள் உள்ளிட்டவை அவரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்  தற்போது இது, யாஷ் தயாளின் கிரிக்கெட் பயணத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.