நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலையில் தாபா ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள் இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியரிடம் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை தயார் செய்து காசுக்காக பொதுமக்களுக்கு விற்பனை செய்யாதீர்கள் என கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருணிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வட்ட பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன 3 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் உரிய விளக்கமளிக்க கோரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஹோட்டல் உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.