ஐதராபாத்தில் மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் குளத்தில் மூழ்கி மரணமடைந்த விவகாரம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் குளத்தில் குதிப்பதற்கு முன்னதாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரு அம்மன் சிலை தற்போது காணாமல் போயுள்ளது. இந்த மாயமான அம்மன் சிலையைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளதால், இந்த மரண வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது தற்கொலை வழக்காகக் கருதப்பட்டாலும், இதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க போலீஸார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் தேஜஸ்வினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அவர் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, அருகில் இருந்த ஒரு கோயிலுக்குள் நுழைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அங்கு இருந்த அம்மன் சிலையை கையில் எடுத்துக்கொண்டு, நேராக அருகில் இருந்த குளத்திற்குள் அவர் சென்றுள்ளார். பின்னர் குளத்து நீரில் மூழ்கி அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. ஆனால், அவர் கையில் எடுத்துச் சென்ற அம்மன் விக்கிரகம் இதுவரை கிடைக்கவில்லை. அந்தச் சிலை கிடைத்தால் மட்டுமே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுக்கு உதவியாக இருக்கும் என போலீஸார் நம்புகின்றனர்.

 

காணாமல் போன அம்மன் சிலையைத் தேடுவதற்காக, மீட்புப் படையினர்  படகுகள் மற்றும் அதிநவீன தேடுதல் குழுக்களுடன் அந்தப் பெரிய குளத்தில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், தேஜஸ்வினியின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தைக் கண்டறிய அவரது தாயார் அருணாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், தேஜஸ்வினி எழுதி வைத்ததாகக் கூறப்படும் ஒரு தற்கொலை கடிதமும் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது வங்கிப் பணப் பரிவர்த்தனைகள், மொபைல் போன் அழைப்புகள் மற்றும் சம்பவத்திற்கு முந்தைய நாட்களின் அவரது நடமாட்டங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் மற்றொரு அதிர்ச்சித் தகவலாக, தேஜஸ்வினி தங்கியிருந்த வாடகை அறை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.3,500 வாடகை செலுத்தப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் வரை வாடகை கொடுக்கப்பட்டுள்ளது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மேல் இரண்டு தளங்கள் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.