துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. எங்கு திரும்பினாலும் மரண ஓலங்களும் பிண துர்நாற்றமும் வீச தொடங்கியுள்ளது.

இதனால் அந்நாடுகள் முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்குப் பின் துருக்கியின் அந்தாக்யா நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அதே பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதில் துரதிஷ்டவசமாக குழந்தை மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டது.
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வார காலம் ஆகிய பின்பு மீட்பு பணிகளை நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையத்தின் தலைவரான யூனூல் சேகர் கூறியதாவது “நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி பெரும்பாலான மாகாணங்களில் முடிவடைந்துள்ளது. நாளை இரவுக்குள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை முழுவதுமாக முடிக்க முடிவெடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.