பணம் என்பது எளிதாக கிடைக்கக்கூடியதல்ல, அதை நிர்வகிப்பதும் மிக முக்கியம். இந்த வாழ்க்கைப் பாடத்தை, ஒரு அமெரிக்க தாய் தனது குழந்தைகளுக்கு அனுபவத்தால் கற்றுக்கொடுக்கிறார். ஜார்ஜியாவைச் சேர்ந்த 38 வயதான லாடோயா விட்ஃபீல்ட், தனது 9 வயது இரட்டைப் பெண் குழந்தைகள் கிரேஸ் மற்றும் ஆட்டம் ஆகியோரிடம் வீட்டில் தங்கும் வசதிக்காக “வாடகை” வசூலிக்கிறார்!
லாடோயா கூறும் படி, இது ஒரு கடுமையான தாயின் நடவடிக்கை அல்ல, மாறாக பணத்தின் மதிப்பு, பொறுப்பும், வீட்டு செலவுகளின் அடிப்படை அறிவும் தனது குழந்தைகளுக்குள் பதியச் செய்யும் நோக்கத்துடன் செய்கிற முயற்சி. ஒரு நாள், இரட்டைக் குழந்தைகள், விலையுயர்ந்த உணவகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் என தொடர்ந்து கேட்டதால்தான், லாடோயா இந்த முடிவுக்கு வந்துள்ளார். தன்னிடம் பணம் இல்லையென்று சொன்னதும், குழந்தைகள். “உங்களிடம் இப்போதுதான் சம்பளம் வந்த்துள்ளதல்லவா?” என்று கேட்க, அவர்களுக்குப் பணம் பற்றிய புரிதல் இல்லை என்பதை லாடோயா உணர்ந்துள்ளார்.
அதன்பின், லாடோயா தனது மகள்களுடன் ஒரு வாடகை ஒப்பந்தம் போலி வடிவத்தில் தயாரித்தார். அதில், வாரந்தோறும் ‘சம்பளமாக’ சில தொகை வழங்கப்படுகிறது. அதிலிருந்து, அவர்கள் வீட்டு வாடகை, மின்சாரம், வைஃபை, எரிவாயு ஆகியவற்றுக்காக ‘வாடகை’ செலுத்த வேண்டும். இதில் தவறுகள் நிகழ்ந்தால் அபராதமும் விதிக்கப்படும். நேர்மையிலும், நடத்தை, பாடத்தில் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவதிலும் சிறந்த முன்னேற்றம் காட்டினால், போனஸும் வழங்கப்படும்.
அதே நேரத்தில் வாடகையை செலுத்தத் தவறினால், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என்றும் லாடோயா கூறுகிறார். இது, வாழ்க்கையின் கடுமையான உண்மைகளை சிறு வயதில் விளக்கும் வகையில், விழிப்புணர்வுடன் பயிற்சி அளிக்கின்றது.
குழந்தைகள் ஆரம்பத்தில் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும், நிதி மேலாண்மை மற்றும் தயாரிப்புடன் பணத்தைச் செலவழிக்கும் பழக்கம் அவர்களுக்கு விரைவில் உருவாகியுள்ளது. கடமை மற்றும் பதிலை ஏற்பது எளிதானதாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய முயற்சி சமூக ஊடகங்களில் பாராட்டையும், சிலர் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
