தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்ஜிஆர் கடந்த 1970-ம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை முதன் முறையாக அறிவித்தார். இந்த சின்னத்தை அறிவித்த பிறகு இனி நான் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க போவது கிடையாது. இனிமேல் இரட்டை இலை தான் என்னுடைய சின்னம் என்று கூறினார். தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்று சிறப்பான முறையில் ஆட்சி செய்த நிலையில் அவரைத் தொடர்ந்து அம்மா ஜெயலலிதா தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பொறுப்பில் இருந்தவரை யாரிடமும் கூட்டணி என்று கேட்டு சென்றதில்லை என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகவே பலரும் காத்திருப்பதாகவும் அதிமுக கூட்டணி என்று யாரிடமும் கேட்பதற்கு சென்றதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அதிமுகவில் எதற்கு எடுத்தாலும் பாஜகவை தான் நாடுகிறார்கள். அதிமுக ஆதரவு சென்று கேட்கும் அளவிற்கு பாஜக தமிழ்நாட்டில் பெரிய கட்சியாக வளர்ந்து விட்டதா என்பது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவின் உதவியை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நாடுவதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் வேண்டுமானால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து தான் கையெழுத்து போட வேண்டும். ஆனால் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனி தனி அணியாக இருப்பதால் தனிதனி வேட்பாளர்களின் நியமிக்கும் போது கட்டாயமாக இரட்டை இலை முடக்கப்படும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக கூட்டணி நாடி சென்றதாகவும் விமர்சிக்கிறார்கள்.