பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 72-வது ஓவரின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது முகமது ரிஸ்வான் 53 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென, சைட்ஸ்கிரீன் முன்னால் யாரோ நடமாடுவதாகக் கூறி ரிஸ்வான் ஆட்டத்தை நிறுத்தினார்.

வங்கதேச பந்துவீச்சாளர்களின் வேகத்தைக் குறைக்கவும், நேரத்தை வீணடிக்கவும் ரிஸ்வான் வேண்டுமென்றே இவ்வாறு செய்வதாக லிட்டன் தாஸ் கருதினார். இதனால் அதிருப்தியடைந்த லிட்டன் தாஸ், ரிஸ்வானிடம் என்ன பிரச்சினை எனக் கேட்டார். அதற்கு ரிஸ்வான், “அங்கே பார், சைட்ஸ்கிரீன் முன்னால் யாரோ நிற்கிறார்கள்” என்றார்.

இதைக் கேட்டு கடுப்பான லிட்டன் தாஸ், “இப்போது தான் அரைசதம் அடித்திருக்கிறார், அதற்குள் இவருடைய ஓவர் ஆக்டிங் ஆரம்பித்துவிட்டது” என்று கிண்டலாகக் கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த ரிஸ்வான், லிட்டன் தாஸுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை மோசமாவதைக் கண்ட கள நடுவர்கள் (னஉடனடியாக இருவருக்கும் இடையே புகுந்து சமாதானம் செய்தனர். ரிஸ்வானை அமைதிப்படுத்திய நடுவர்கள், லிட்டன் தாஸையும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினர். கிரிக்கெட் மைதானத்தில் முகமது ரிஸ்வான் அடிக்கடி செய்யும் சில மிகையான செய்கைகளுக்காக ஏற்கனவே விமர்சிக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர்கள் தலையிட்டு ஓவர் முடிந்த போதிலும், வங்கதேச வீரர்கள் ரிஸ்வானை சும்மா விடவில்லை. ரிஸ்வானின் அருகில் நின்றிருந்த வங்கதேச ஃபீல்டர்கள், பிரபல பாலிவுட் நகைச்சுவைத் திரைப்படத்தின் ஐகானிக் வசனத்தைக் கூறி அவரை வம்புக்கு இழுத்தனர்.

“இவருடைய ஓவர் ஆக்டிங்கிற்காக இவருக்கு கொடுக்கும் தொகையில் இருந்து 50 ரூபாயை கட் பண்ண வேண்டும்”  என்ற பாலிவுட் மீம் வசனத்தை மைதானத்தில் பேசி ரிஸ்வானை அவர்கள் கடுமையாகக் கிண்டல் செய்தனர்.

மைதானத்தில் இத்தகைய பரபரப்பான சூழல் நிலவிய போதிலும், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதன்முறையாக தொடரை முழுமையாகக் கைப்பற்றி (2-0 என்ற கணக்கில் கிளீன் ஸ்வீப்) வரலாற்று சாதனை படைக்க வங்கதேச அணிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.

437 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி வரலாற்றுத் தோல்வியிலிருந்து தப்பிக்க இன்னும் 121 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது முகமது ரிஸ்வான் 75 ரன்களுடனும், சாஜித் கான் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இதற்கு முன்னதாக ஒருநாள் போட்டி கேப்டன் சல்மான் அலி ஆகா 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஏற்கனவே டாக்காவில் நடைஞபெற்ற முதல் டெஸ்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்திருந்தது. தற்போது சில்ஹெட் டெஸ்டிலும் வரலாற்றை ஆவர்த்தனம் செய்ய வங்கதேசம் துடிக்கிறது. ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக முகமது ரிஸ்வான் இன்னும் களத்தில் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறார்.