ஐபிஎல் தொடரின் இளம் நட்சத்திரமும், இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நம்பிக்கையுமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அளித்த சுவாரசியமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகாரைச் சேர்ந்த இடதுகை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாகக் களம் கண்ட அவர், தனது முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஐபிஎல் 2025-இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் அவர் விளாசிய சதம், அவரை ஒரே இரவில் உலகப் புகழ்பெற்ற வீரராக மாற்றியது.

மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (2026) இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வைபவ்விடம், “ஐபிஎல் 2026 தொடரில் உங்களின் தனிப்பட்ட இலக்கு என்ன? எத்தனை ரன்கள் எடுக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த வைபவ், “இப்படி நீங்கள் கேட்டால், நான் இரண்டு அல்லது மூவாயிரம் ரன்கள் எடுப்பேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்” என்று கிண்டலாகப் பதிலளித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களும், செய்தியாளர்களும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.

 

பின்னர் நிதானமாகப் பேசிய அவர், “இத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்று என்னால் முன்கூட்டியே திட்டமிட முடியாது. நான் எனது பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். அணியின் வெற்றிக்காக விளையாடி, கோப்பையை வெல்வதே எனது முதன்மை நோக்கம். தனிப்பட்ட இலக்குகள் குறித்து நான் பெரிதாகச் சிந்திப்பதில்லை,” என்று முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், வைபவ் குறித்துக் கூறுகையில், “அவர் இன்னும் 14 வயது சிறுவன் தான். ஊடக வெளிச்சம் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து அவரைத் தள்ளி இருக்கச் செய்ய வேண்டும். அவரைச் சுதந்திரமாக விளையாட விடுங்கள்; அவர் நிச்சயம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சென்றுள்ள நிலையில், இந்த சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராகக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.