
கேரள மாநிலத்தில் உள்ள திரூர் பகுதியில் அப்துல் கஃபூர்-சஜிலா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முகமது சினான் (9) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் தினந்தோறும் பக்கத்து வீட்டை கடந்து மசூதிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளிலும் பக்கத்து வீட்டை கடந்த சிறுவன் மசூதிக்கு செல்லக் கிளம்பினான். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஹஜ் பயணம் சென்றிருந்தார்கள்.
அந்த வீட்டில் ஆளில்லாத நேரத்தில் சிறுவன் தனியாக சென்ற நிலையில் தானியங்கி கதவில் திடீரென சிக்கிக் கொண்டார். இதை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த தகவல் சிறுவனின் பாட்டி ஆஸ்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்யா மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் ஒரே நேரத்தில் சிறுவன் மற்றும் பாட்டி என இரு உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.