
புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார்.
அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் உடனடியாக உள்ளே குதித்து பேரனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவர்களை தேடி பார்த்தனர்.
அப்போது கிணற்றின் அருகே ஆடுகள் மட்டும் மேய்ந்து கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த கணேசன் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீமைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் தேடி பார்த்த போது தாத்தாவும் பேரனும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கணேசன் மற்றும் கோபால் இருவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.