சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் செல்வாக்கு உயர்கிறது மற்றும் திமுக சிறப்பாக செயல்படுகிறது என்ற பொறாமையில் பேசி வருகிறார். திமுக கூட்டணி விரைவில் உடைய போகிறது என்று அவர் கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஜோசியராக மாறி விரக்தி நிலைக்கு சென்று விட்டார்.

பக்கத்து வீட்டில் என்ன தகராறு நடக்கிறது என்று சிலர் காத்திருப்பது போல் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்று காத்திருக்கிறார். திமுக கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி கிடையாது. அது கொள்கைக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. எங்கள் கூட்டணியில் விவாதங்கள் மற்றும் பேச்சு யுத்தங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படவில்லை. தன்னுடைய கட்சியை வளர்க்க முடியாத ஒருவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஜோசியராக மாறி திமுக கூட்டணி உடைந்து விடும் என்று கூறி வருகிறார் என்றார்.