
பஞ்சாப் மாநிலம் பதிந்தாவைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் அமன்தீப் கவுர், தற்போது ஊழல் மற்றும் போதைப்பொருள் என 2 வழக்குகளின் மையமாக மாறியுள்ளார். ஏப்ரல் மாதம் 17.71 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அவர், NDPS சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததற்காக பஞ்சாப் விஜிலென்ஸ் துறையால் மே 26ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமன்தீப் கவுரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விபரம் :
பதிந்தா விராட் கிரீனில் நிலம் (217 சதுர அடி ): ரூ.99 லட்சம்
டிரீம் சிட்டி நிலம் (120.83 சதுர அடி): ரூ.18.12 லட்சம்
மஹிந்திரா தார் கார்: ரூ.14 லட்சம்
ராயல் என்ஃபீல்ட் புல்லட்: ரூ.1.7 லட்சம்
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் SE, விவோ போன், ரோலக்ஸ் வாட்ச், வங்கி இருப்பு – மொத்த மதிப்பு ரூ.1.35 கோடி.
விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய தகவல்கள்:
2018 முதல் 2024 வரையிலான அவரது அறியப்பட்ட மொத்த வருமானம் ரூ.1.08 கோடியாக இருந்த போதிலும், அவர் செய்த செலவுகள் ரூ.1.39 கோடியாக உள்ளன. இது அறியப்பட்ட வருமானத்தை விட ரூ.31.27 லட்சம் அதிகமாக, சுமார் 28.85% வருமானத்துக்கு மேலாக செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இன்ஸ்டா ராணி’ என்று அழைக்கப்படும் அமன்தீப், தனது ஆடம்பர வாழ்க்கையை சமூக ஊடகங்களில் கண்காட்சிபோல வெளியிட்டதன் பின்னணியில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, பதிந்தா விஜிலென்ஸ் பீரோ காவல் நிலையத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற ஒரு பெண் காவலரின் வாழ்க்கை பின்னணி இவ்வாறு சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்திருப்பது சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.