ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது உலகளாவிய சந்தைகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இன்று ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 73,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 550 புள்ளிகளுக்கும் மேல் சரிவைச் சந்தித்தது.

இந்த அதிரடி சரிவினால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆவியாகின. கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய வீழ்ச்சி, பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கும் பங்குச்சந்தையில் இத்தகைய சரிவு நீடிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்திய சந்தை தொடர்ந்து தடுமாற்றத்துடனேயே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.