தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

புத்தாண்டு வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

அதன்படி சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளும், கோவையிலிருந்து 150 சிறப்பு பேருந்துகளும் இன்று மாலை முதல் இயக்கப்பட உள்ளன. தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு வசதியாக நள்ளிரவு வரை பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துதுறை திட்டமிட்டுள்ளது.