மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ஜாமீன் அமைச்சர்கள் தான். திமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஊழல் குறித்த உண்மையை சொன்னதற்காக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகாவை மாற்றி முதல்வர் அசிங்கப்படுத்திவிட்டார். திமுக அமைச்சர்களை பொறுத்தவரையில் கரப்ஷன் மற்றும் கமிஷன் மட்டும் தான்.  பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிவு படுத்தி பேசியதோடு தாழ்த்தப்பட்ட கவுன்சிலரை அவமரியாதை செய்துள்ளார்.

அவர் பெண்களின் இலவச பேருந்து பயணத்தை ஓசி பயணம் என்று கூறினார். இன்றைக்கு அம்மா ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார். அனைத்து அமைச்சர்களும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடக்கப் போகிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று முதல்வர் பேசி வருகிறார்.

இனிமேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. நாடு தாங்காது. இந்தியாவின் முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியே கூறியுள்ளார். நாட்டின் பிரதமர் பாராட்டிய ஒரே ஒரு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். மேலும் கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.