தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

நேற்றைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டிருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதுச்சேரி சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. எனவே இன்று திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.