தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன. 15) விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, இப்படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்கச் சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, தணிக்கை வாரியத்தின் (CBFC) மேல்முறையீட்டை ஏற்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய இப்படம் முடங்கியுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்கித் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரித் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரோடக்‌ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

நீதியரசர்கள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று காலை 11 மணியளவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் வெளியீடு அமையும் என்பதால் விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.