உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் இதுதான் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்..

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த 2003-ம் ஆண்டைப் போலவே ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் சாம்பியன் கனவை முறியடித்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இது தவிர கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய  ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் குவித்து மேட்ச் வின்னிங்ஸ் ஆடினார். மேலும் அவருக்கு உறுதுணையாக லபுஷேன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார். அதேபோல மிட்செல் மார்ஷ் 15 ரன்களும், டேவிட் வார்னர் 7 ரன்கள் எடுத்தனர், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்கள் எடுத்தார். கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 2 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள் இதயம் நொறுங்கி காணப்பட்டனர். அதே சமயம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் கண்கலங்கி காணப்பட்டனர்.. 

இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா,“முடிவு எங்கள் வழியில் செல்லவில்லை. இன்று நாங்கள் போதுமானதாக ஆடவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம், இன்னும் 20-30 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், கேஎல் ராகுல் மற்றும் கோலி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தபோது நாங்கள்  270-280 என்ற ஸ்கோரை எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம்” என்று கூறினார்.

மேலும் “விளக்குகளின் கீழ் பேட்டிங் செய்வது சற்று சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அதை ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை. நாங்கள் போர்டில் போதுமான ரன்களை எடுக்கவில்லை. நீங்கள் 240 ரன்கள் எடுத்திருக்கும்போது, ​​நீங்கள் விக்கெட்டுகளை எடுக்க விரும்புகிறீர்கள், ஆனால் ஹெட் மற்றும் லாபுஷாக்னே ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எங்களை ஆட்டத்திலிருந்து முழுமையாக வெளியேற்றிய பெருமைக்குரியவர்கள். நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம்”.

“சீமர்கள் தொடக்கத்திலேயே  அந்த 3 விக்கெட்டுகளை எடுத்தனர், மேலும் அங்கு மற்றொரு விக்கெட்டை  எடுத்தோம், என்றால்  ஆட்டம் எங்கள் பக்கம் வந்திருக்கலாம். இருப்பினும் ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய அந்த இரண்டு பேருக்கும் பெருமை” என்று கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால், இந்த ஆண்டு ஐசிசி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது தோல்வி இதுவாகும். மறுபுறம், ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி 6வது உலகக் கோப்பையை வென்றது.