
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அதிவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல நல்ல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது.
குறிப்பாக ரேஷன் கார்டுகள் மூலமாக தான் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல திட்டங்கள் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்காக அனைவரும் கைரேகை பதிவு செய்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது விரல் ரேகையை பதிவு செய்வதோடு ஆதார் கார்டையும் சரி பார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி கடந்த வருடம் தொடங்கிய நிலையில் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வேலையை செய்து முடிக்காததால் மே 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் கைரேகை பதிவு செய்ய முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டம் மற்றும் மாநிலங்களில் ஐஎம்பிடிஎஸ் அல்லது இகேஒய்சி மூலமாக இந்த பணியை செய்து முடிக்க வேண்டும். மேலும் இதற்கான கால அவகாசம் மே 31ஆம் தேதி என்பதால் இன்னும் 14 நாட்கள் மட்டும் தான் இருக்கிறது. எனவே இந்த உரிய நேரத்திற்குள் இந்த பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.