திருச்சி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசு இயந்திரம் திமுக வேட்பாளருக்கு தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் தக்க வைக்க இன்னும் ஆயிரம் வாக்குகள் தான் தேவை. அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சியினருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. டெபாசிட் இழந்தாலும் மகிழ்ச்சியில் தான். ஏனெனில் விலை போகாத வாக்குகள் எங்களிடம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிட்டதை அதிமுக மற்றும் பாஜக வாக்குகள் என்று முத்திரை குத்துகிறது திராவிடம்.

15 கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிட்ட அவர்கள் எங்கே தனித்து நின்று போட்டியிட்ட நான் எங்கே. பாஜகவினர் எதற்காக எனக்கு ஓட்டு போட வேண்டும். அதிமுக மற்றும் பாஜக நான் வளர வேண்டும் என்பதை விரும்புவார்களா. அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்கள் ஓட்டு போடுவார்கள். கடந்த முறை 797 வாக்குகள் நோட்டாவில் விழுந்த நிலையில் இந்த முறை 6000 ஓட்டுகளும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 12,000 ஓட்டுகளும் விழுந்துள்ளது. மேலும் அவர்களுக்கெல்லாம் ஓட்டு போட்டது யார் என்று கேட்டார்.