
தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டது. நாளையே விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் பணியாற்ற விரும்பும் பெண்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் (புதன்கிழமை) நாளை மாலை 5 மணி வரை அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 25-35 ஆகும். விதவைகள், ஆதரவற்ற மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு வயது வரம்பு 40. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், அந்த மையம் உள்ள கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக கூறப்பட்டுள்ளது.