ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதுவரை 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேஎஸ் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஓ. பன்னீர்செல்வம் முதலில் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்த நிலையில் அவர் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அதன் பிறகு அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தோடு டெல்லி செல்லும் நிலையில் ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாக கூறப்படுகிறது.  இரட்டை இலை சின்னம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு தான் தங்களுடைய முழு ஆதரவும் இருக்கும் என்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே தான் போட்டி என்பதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.