மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அஜ்னி ரயில்வே மேம்பாலத்தில் நடந்த ஒரு திக் திக் சம்பவம் ஒட்டுமொத்த இணையதளத்தையும் உலுக்கியுள்ளது.

இளம்பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக அஜ்னி மேம்பாலத்தின் விளிம்பில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாலத்தின் கீழே அதிவேகமாக ரயில்கள் சென்று கொண்டிருந்த நிலையில், எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற சூழல் நிலவியது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், துளியும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.

அந்தப் பெண் கவனிக்காத நேரத்தில், பாலத்தின் விளிம்பிற்குச் சென்ற அந்த இளைஞர், சட்டென அந்தப் பெண்ணைப் பின்னால் இருந்து கெட்டியாகப் பிடித்து இழுத்தார்.

மயிரிழையில் அந்தப் பெண் பாலத்தில் இருந்து கீழே விழுவது தவிர்க்கப்பட்டது. அங்கிருந்த மற்ற இளைஞர்களும் உடனடியாக ஓடி வந்து அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.

இந்தச் சாகச மீட்பு நடவடிக்கை அங்கிருந்த ஒருவரின் செல்போனில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணைக் காப்பாற்றத் தனது உயிரையும் துச்சமென மதித்துச் செயல்பட்ட அந்த இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.