அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் சமூக மற்றும் பதிப்பகப் பிரிவுத் தலைவரான பவிஷா ஜெயின், வேலை நேர்காணலுக்கு வந்த ஒரு பெண் வேட்பாளரை அவருடைய டி-ஷர்ட்டில் இருந்த வாசகத்திற்காக நிராகரித்ததாக லிங்க்டினில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்தப் பெண் வேட்பாளர் சிறந்த பணி அனுபவமும், சமூக ஊடகங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களையும் கொண்டு தகுதியானவராக இருந்தாலும், நேர்காணல் தொடங்கும் முன்பே பவிஷா அவரை நிராகரித்துள்ளார்.
இதனால் அதற்கு முக்கியக் காரணம், அந்தப் பெண் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் நான் வேலை செய்வதற்கு தகுதியை விட மிகவும் அழகானவள்/சிறந்தவள் என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான். இது கடுமையான ஆடைக்கட்டுப்பாடு பற்றியது அல்ல, மாறாக நாம் இருக்கும் இடத்தின் சூழலைப் புரிந்துகொள்வது பற்றியது என்று பவிஷா விளக்கம் அளித்துள்ளார்.
இதனையடுத்து நாம் எப்படி திருமணத்திற்கு நீச்சல் உடையோ அல்லது உடற்பயிற்சிக் கூடத்திற்கு டக்செடோ உடையோ அணிந்து செல்வதில்லையோ, அதேபோல நேர்காணலுக்கு வரும்போது நாம் அணியும் ஆடையும் நம்மைப் பற்றிப் பேசும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அந்தப் பெண் தன் ஆடையின் மூலம் தனக்கு இந்த வேலை தேவையில்லை என்று மறைமுகமாகக் கூறியதாகவும், அதனால் தான் அவரை நிராகரித்ததாகவும் பவிஷா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், வேலை நேர்காணலின் போது தகுந்த ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
