மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிரடித் தள்ளுமுள்ளு நாடகம் அரங்கேறியது. பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த போது, அங்கு வந்த இரண்டு பெண்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களிலேயே முற்றி, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு பயங்கர மோதலாக மாறியது. அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களின் கண்முன்னே, அந்த இரண்டு பெண்களும் தலைமுடியைப் பிடித்து இழுத்து, கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டு தரையில் விழுந்து புரண்டனர். இந்த மோதலில் ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் எஸ்பி அலுவலக வளாகமே பெரும் போர்க்களமாக மாறியது.
#WATCH | 2 Women Punch, Kick And Pull Each Other’s Hair Inside #Jabalpur SP Office During Public Hearing; Both Detained#MadhyaPradesh #MPNews #IndiaNews pic.twitter.com/7iCvzPJGen
— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 16, 2026
அங்கிருந்தவர்கள் இந்த மோதலைத் தடுத்து, காயம் அடைந்த அந்தப் பெண்ணை மீட்டு சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காயம் அடைந்த பெண் மற்றொரு பெண்ணான வித்யா ரைக்வார் என்பவர் மீது புகார் அளிக்க எஸ்பி அலுவலகத்திற்கு வந்தது தெரியவந்தது. யூடியூபர் என்று கூறிக்கொள்ளும் வித்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அவதூறான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், வித்யாவுக்கு குற்றப்பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், உண்மைகளைத் திரித்து வீடியோ வெளியிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தப் பெண் எஸ்பி-யிடம் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த வித்யா, அந்தப் பெண்ணுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இந்த வினோத சண்டை ஒட்டுமொத்த எஸ்பி அலுவலகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
