ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி இணைய கேபிள்களுக்குப் புதிய வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடுகட்ட, ஈரான் இந்த ‘டிஜிட்டல் முற்றுகை’ ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்டங்களைப் பயன்படுத்தி, தனது கடல் எல்லை வழியாகச் செல்லும் டேட்டா டிராஃபிக்கிற்கு வரி வசூலிக்க ஈரான் முயல்கிறது. இதன் மூலம் அமேசான், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உருவாகலாம்.

இதனால் தினமும் சுமார் 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் நிதித் தகவல்கள் இந்தத் தரைக்கீழ் கேபிள்கள் வழியாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே பரிமாறப்படுகின்றன. வரி செலுத்தத் தவறினால் அல்லது ஈரானின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால், இந்த கேபிள்களைத் துண்டிக்கப்போவதாக ஈரான் மறைமுகமாக எச்சரித்துள்ளது.

இது சர்வதேச நிதிச் சந்தை மற்றும் உலகளாவிய இணைய சேவைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். மேலும், இந்த கேபிள்களின் பராமரிப்புப் பணிகளைத் தனது நாட்டு நிறுவனங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துவது, தரவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.