இந்தியப் பயணிகள் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையங்கள் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது, இனி ‘ஏர்போர்ட் டிரான்சிட் விசா’ பெறத் தேவையில்லை என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக, இந்தியர்கள் பிரான்ஸ் வழியாக மூன்றாம் நாட்டுக்குப் பயணம் செய்யும் போது, விமான நிலையத்தின் சர்வதேசப் பகுதியை விட்டு வெளியேறாவிட்டாலும் கூட விசா கட்டாயம் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளதால், இந்தியப் பயணிகள் கூடுதல் செலவோ அல்லது விசா நடைமுறைகளோ இன்றி பிரான்ஸ் விமான நிலையங்களை ஒரு இணைப்புப் புள்ளியாகப் பயன்படுத்தி எளிதாகப் பயணம் செய்யலாம்.
இந்த முக்கிய முடிவானது, கடந்த பிப்ரவரி மாதம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வருகை தந்தபோது பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பிரான்சில் உயர்கல்வி பயின்று முதுகலைப் பட்டம் பெற்ற இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் குறுகிய கால ‘ஷெங்கன் விசா’ வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 30,000 இந்திய மாணவர்களைத் தங்கள் நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்ற பிரான்சின் இலக்கிற்கு இத்தகைய விசா தளர்வுகள் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
