இந்திய ஓட்டுநர்களை கெளரவிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “தேஷ் சாலக்” (Desh Chaalak) எனும் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது “போக்குவரத்து துறையில் ஓட்டுநர்களின் பங்கு மிகப்பெரியது. வளர்ந்து வரக்கூடிய உலக பொருளாதார சூழலில் போக்குவரத்து ஒரு முதன்மையான இடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் அதில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்களின் பணிநிலை மற்றும் அவர்களின் மன நிலையை கவனத்தில் கொள்வது தேவையான ஒன்றாக இருக்கிறது. அவர்கள் அதிகப்படியான வெப்ப நிலையில் பணியாற்றுவதற்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே லாரி ஓட்டுநர்களுக்கு குளிரூட்டப்பட்ட கேபின்கள் அமைப்பது தேவைப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக செலவு அதிகரிக்கும் என சிலர் எதிர்க்கின்றனர். இருந்தாலும் நான் இங்கு வருவதற்கு முன் இனிமேல் லாரிகளிலுள்ள ஓட்டுநர் கேபின் ஏசியால் குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்கவேண்டும் என்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டு வந்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.