
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுக்க டிஎஸ்பி காயத்ரி மற்றும் காவலர்கள் முயற்சி செய்தபோது ஒரு காவலர் தாக்கப்பட்டார்.
அதோடு டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் எஸ்.பி கண்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இனி காவலர்கள் பணிக்கு வரும்போது கண்டிப்பாக கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இனி விருதுநகர் மாவட்டத்தில் காவலர்கள் பணியில் இருக்கும் போது கையில் லத்தி இல்லாமல் இருந்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும் போலீஸ்காரர்கள் லத்தியுடன் பேசுவதற்கும் லத்தி இல்லாமல் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் கூறினார்.