மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு ஏடிஜிபி தலைமையில் 400-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் விற்பனை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களே வாங்கி விற்பனை செய்கிறார்கள். மூன்று மாதங்கள் வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கா விட்டால் ரேஷன் அட்டை திரும்ப பெறப்படும் என்ற போலி வதந்தியை நம்பி பொதுமக்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதேபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான கடத்தல் நிகழ்கிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போன்று பொதுமக்கள் மத்தியிலும் உரிய விழிப்புணர்வு வேண்டும் என்று கூறினார். அதோடு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, டிரைவர் மற்றும் கிளீனர் போன்ற தொழிலாளிகளை பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.