சென்னையில் பள்ளிகள் திறக்கும் காலை நேரங்களில், மாணவர்கள் சிலர் ஹெல்மெட் இல்லாமலும், உரிய வயதும் ஓட்டுநர் உரிமமும் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது.
இது சாலை பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களின் முன்னிலையில் “சாலை பாதுகாப்பு மன்றம்” அமைக்கப்பட வேண்டும் என்றும், தினசரி காலை கூட்டங்களில் சாலை விதிகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வெளியிலும் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க ஆசிரியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் மாணவர்களின் பெற்றோரை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து, எச்சரிக்கை விடுத்த பிறகே மாணவர்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், என்சிசி, என்எஸ்எஸ், சாரணர் இயக்கம் போன்ற அமைப்புகளில் உள்ள மாணவர்களுக்குப் போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்பு பயிற்சிகள் வழங்கி, விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் தெருநாடகங்கள் வழியாகச் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
