பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் முதலாண்டு நிறைவையொட்டி, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது ஏதேனும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகவும் தீவிரமான மற்றும் தீர்க்கமான பதிலடியைச் சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிலம், நீர் மற்றும் வான் என அனைத்துத் தளங்களிலும் எதிரிகளை எதிர்கொள்ளும் திறன் பாகிஸ்தானிடம் தற்போது முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு தவறான மதிப்பீடும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள கவாஜா ஆசிஃப், பாகிஸ்தான் வெறும் பதிலடி கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் தங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் தாங்களே முற்றுப்புள்ளி வைப்போம் என்றும், அந்தப் போரின் போக்கையும் முடிவையும் பாகிஸ்தானே தீர்மானிக்கும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்தியாவின் கடந்த கால அதிரடி நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் தற்காப்பு மற்றும் தாக்குதல் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் நோக்கில் அவரது இந்த உரை அமைந்துள்ளது.