நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) பிபிஓ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததுடன், அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற விவகாரத்தில், மனிதவள மேம்பாட்டு (HR) மேலாளர் நிதா கான் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கானை, சக ஊழியர்கள் ‘தபாங் மேம்’ (Dabang Mam) என்று அழைத்து வந்துள்ளனர். அலுவலகத்தில் மிகுந்த அதிகாரத்துடன் வலம் வந்த இவருக்குப் பயந்து பல ஊழியர்கள் மௌனம் காத்துள்ளனர். இவர் வெறும் மேலாளராக மட்டும் செயல்படாமல், ஊழியர்களை மிரட்டி மதம் மாற்ற முயன்ற கும்பலுக்குத் தலைவியாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது பெண் ஊழியர்கள் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிய வேண்டும் என்றும், பர்தா அணியும் முறைகளையும் நிதா கான் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 7 ஆண் அதிகாரிகள் ஒரு கும்பலாகச் செயல்பட்டு, பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததுடன், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமாகப் பேசியுள்ளனர். ஆண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரில், தன்னை கட்டாயப்படுத்தி தொப்பி அணிய வைத்து, தொழுகை செய்ய வைத்ததாகவும், அதனைப் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அசைவ உணவுகளை உண்ண ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முயன்றபோது, மற்றொரு பெண் அதிகாரி அதனைத் தடுத்துள்ளார். இது போன்ற விஷயங்கள் அலுவலகத்தில் சகஜம் எனக் கூறி புகாரை மூடிமறைக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பல் ஒரு ரகசிய வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் ஊழியர்களைக் குறிவைத்து ‘மூளைச் சலவை’ செய்துள்ளனர். இதில் நிதா கானும் உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மலேசியாவைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்குத் தொடர்பு இருப்பது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஊழியர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இதுவரை இந்த வழக்கில் 7 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான நிதா கான் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் நாசிக்கில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன.