அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பதற்றமான உறவு சூழ்நிலையை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதிரடியாக ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, சீனாவில் பணியாற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சீனர்களுடன் காதல் மற்றும் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதமே இந்த உத்தரவு அமலுக்கு வந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உத்தரவின் பின்னணியில் ‘ஹனி டிராப்’ எனப்படும் உளவுத்துறை சூழ்ச்சி பயம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகளை சீன உளவுத்துறையினர் காதல் உறவுகள், செக்ஸ் வீடியோக்கள் போன்ற வழிகளில் சிக்கவைத்து, முக்கியமான தகவல்களை திரட்டலாம் என்பதற்கான அபாயம் குறித்து அமெரிக்க அரசு கவலை கொண்டுள்ளது. இதனால், அதிகாரிகள் பாதுகாப்பு கருதியே இந்த வகை கடும் கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர், வரி விதிப்பு, உளவுத்துறை மோதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இந்த உத்தரவு இருநாடுகளுக்கும் இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. சீனாவில் பெய்ஜிங், குவாங்சோ, ஷாங்காய், வுஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் பணியாளர்கள் இந்த உத்தரவை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.