பெங்களூருவில் நிலவும் கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.

இதனால் கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வரும் எல்பிஜி இறக்குமதி 30 சதவீதம் குறைந்துள்ளதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹோட்டல் உணவையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.