
பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் ‘பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணம் சுத்திகரிப்பு’ குறித்த கண்காணிப்புக்குட்பட்டதாகப் பார்ப்படுகின்றன. கடந்த 2022ல் பாகிஸ்தான் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சேர்க்கும் நிலை உருவாகி வருகிறது.
மேலும், இந்திய அரசு, உலக வங்கியிடம் பாகிஸ்தானுக்கான புதிய நிதி உதவியை எதிர்க்கும் முடிவையும் எடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல், ஐஎம்எப் (IMF) அமைப்பு பாகிஸ்தானுக்கு அளித்த $1 பில்லியன் உதவியும் விமர்சிக்கப்படுகிறது. அதாவது “பாகிஸ்தான் இந்த உதவித் தொகைகளை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்துகிறது. ஒவ்வொரு உதவிக்கும் பிறகு, ஆயுத கொள்முதல் அதிகரிக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடந்த கூட்டத்தில், “பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தால், அவர்கள் ஒவ்வொரு காசுக்காகவும் கெஞ்ச வேண்டிய நிலை வரும்” என கடுமையாக எச்சரித்துள்ளார். “பாகிஸ்தான் இந்தியாவுடன் நேரடியாக போரில் வெல்ல முடியாது என்பதால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது.
ஆனால் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் இராணுவமும், பொருளாதாரமும் கடுமையான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பாகிஸ்தான் மீது சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.