சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில் முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட நாட்களில் பணம் இரட்டிப்பாகி தண்டப்படும் என அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் முதிர்வு காலம் முடிவடைந்த பின் பணத்தை திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு பணத்தை திரும்ப பெறாத பொதுமக்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சிவகங்கை நகர் திருப்பத்தூர் மெயின் ரோடு நாகு நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம். அந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.