வெளிநாட்டு பயணங்களின் பொழுது பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. இதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்  எந்த நாட்டை சேர்ந்தவர், பிறந்த தேதி, ஊர், பயண விவரங்கள் அனைத்துமே அதில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் எந்த நாட்டிற்கு நாம் செல்கிறோமோ அந்த நாட்டிற்கு நுழைவதற்கு விசா கட்டாயம் தேவை .இதை பெறுவதற்கு பாஸ்போர்ட் தான் முக்கியமான ஒன்று. பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் விசா தேவை இல்லை என்று சில நாடுகள் சலுகைகளில் வழங்கி வருகிறது. இதன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கும் சம்பந்தப்பட்ட நாட்டிற்கும் அதிக அளவில் இருக்கும் ஒரு முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த இம்மிகிரேஷன் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் வலிமையான பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாடு பெற்றிருக்கிறது. ஏனெனில் இதன் மூலமாக 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். கடந்த ஐந்து வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி  தற்போது சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

சிங்கப்பூர் செல்வத்தின் கோட்டை என்று சொல்லலாம். சந்தை பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடு. தொழில் தொடங்கும் எளிமையான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் வருடம் சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் சிங்கப்பூருக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.  வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருவாயிலும் சலுகைகள் வழங்கப்படுகிறது.