
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், இன்று செய்தியாளர்களை சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும், தங்கள் ஏமாற்றங்களை வெளிப்படுத்தியும் பேசினர். அவர்கள் 14 ஆண்டுகளாக கட்சியில் உழைத்தும், தற்போது கட்சியில் உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
பிரபாகரன் கூறுகையில், நாம் தமிழர் கட்சி ஈழ மக்களை காப்பாற்ற உருவாக்கப்பட்டது, பின்னர் தமிழ் நாட்டின் பிரச்சினைகளுக்காக செயல்படுவதற்கு மாறியது. இதற்காக பல்வேறு வழக்குகளுக்கு மத்தியிலும் சிறையிலும் இருந்தனர். கிருஷ்ணகிரியில் 20,000 உறுப்பினர்களை சேர்த்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளனர். ஆனால், கட்சியின் உயர்நிலையிலிருந்த பொறுப்பாளர்கள் பலர் தற்போது கட்சியில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
பிரபாகரன் மேலும் கூறுகையில், கட்சியில் யாருக்கும் அங்கிகாரம் கிடைக்காமல், உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களை மீண்டும் இணைத்து செயல்படுவதற்கான முயற்சிகள் இல்லை. முந்தைய தேர்தல்களில் வெற்றியை நோக்காமல், புதிய தலைமுறை தலைவர், வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

கட்சிக்கு நிதி அளித்தும், எங்களின் இளமைக்காலத்தை முழுவதும் கட்சிக்காகவே செலவழித்தோம், ஆனால் கட்சியில் யாருக்கும் வளர்ச்சி வாய்ப்பு தராமல், சிலரை மட்டும் ஆதரிக்கிறார் என்று கூறினார். மேலும், சீமான் தனது தனிப்பட்ட வாழ்வில் சொகுசாக இருக்கிறார், ஆனால் கட்சி நிர்வாகிகள் பலர் இன்றியமையாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் எனவும், அதை அவர்களுக்கு உதவுவதற்கான முயற்சி இல்லை என குற்றம்சாட்டினார்.
நிர்வாகிகள் மேலும் கூறுகையில், கட்சியின் செயல்பாடுகளில் கட்டுப்பாடு இல்லை, தனிமனித அடிப்படையில் நடக்கும் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் தோல்வியடைந்தது. சீமான், பிற கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார், ஆனால் நாம் தமிழர் கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு கூட செல்லவில்லை என்றார்.
சிறை சென்றவர்கள் மற்றும் கட்சிக்கு உழைத்தவர்களை மீண்டும் இணைக்கப்படவில்லை என்றால், விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் உருவாக்கப்படும் எனவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.